ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டதாக புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை போலீசார் கைது செய்தனர்.
பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப் கேம் மதன். இவர் மீது சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் பலர் புகார் அளித்துள்ளனர். அதில் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கிரைம் பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் தற்போது தலைமறைவாக இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மாலைக்குள் பப்ஜி மதன் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இந்த வழக்கில் பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தின் நிர்வாகியாக செயல்பட்ட அவரது மனைவி கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

