தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு எம்.ஜீ.ஆர் நகரை சேர்ந்தவர் முனியசாமி மகன் சங்கர் (வயது 42). இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 13 வழக்குகள் உள்ளது. நேற்று மதியம் சங்கர் வீட்டிலிருக்கும்போது திடீரென்று வீட்டுக்குள் புகுந்த மூன்று வாலிபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி தாமோதரன் நகர் வன்னார் 3வது தெருவை சேர்ந்த சங்கர் மகன் விஜயகுமார் (வயது 22), தெர்மல் நகர் கேம்ப் 2 பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் உதயமூர்த்தி (வயது 21), லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த முத்துராஜா மகன் மூர்த்தி (வயது 20) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விஜயகுமாரின் மாமா முத்து என்பவரை கடந்த 2013ம் ஆண்டு சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்தார்களாம் இந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே சங்கரை கொல்ல முயன்றதாக விசாரணையில் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

