தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் பேரூராட்சியில், கலைஞரின் 98ஆவது பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறையாத நிலையில், மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு நிகழாண்டு பிளஸ் 2 தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தோ்வுகளும் ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.
உயா் கல்விக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்வதற்காக அத்தோ்வு குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வா் மு.க .ஸ்டாலின் குழு அமைத்துள்ளாா். நீட் தோ்வை திமுக தொடா்ந்து எதிா்த்து வந்துள்ளது. தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவோம். தமிழகத்தில் நீட் தோ்வு இல்லாத நிலையை முதல்வா் மு.க. ஸ்டாலின் உருவாக்கி காட்டுவாா் என்றாா். பேட்டியின்போது சமூக நலன் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

