திருநங்கைகளுக்கான தனி நல வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் பெ.கீதாஜீவன் கூறினார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: திருநங்கைகள் சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசு அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. பல இடங்களில் திருநங்கைகள் நடனம், நாட்டுப்புறக் கலைகளின் மூலம் தங்களது வாழ்க்கையை மேம்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்பில் அவர்கள் உரிய சலுகைகளைப் பெற்று வாழ்வில் மேம்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கக் கூறியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் அடையாள அட்டை பெற்ற 11 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர். அவர்கள் சமுதாயத்தில் மேம்பாடு அடைவதற்காக தனி நல வாரியம் விரைவில் அமைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறினார்.

