தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பரம் நாடார் திருமண மண்டபத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்துவரும் ஊர்க்காவல் படையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என 200 பேருக்கு இன்று அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ஊர்க்காவல் படையினராகிய உங்களது பணி மிகவும் சிறப்பாக உள்ளது, எல்லோரும் இரவு, பகல் பாராமல் மிக சிறப்பாக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி காவல்துறைக்கு பெருமை சேர்த்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊர்க்காவல் படையினருக்கும், ஆங்காங்கே நிவாரணப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, ஒவ்வொரு பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து ஊர்க்காவல் படையினருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். நேற்று ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திலும் இன்று தூத்துக்குடி உட்கோட்டத்திலும் வழங்கப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டும். அதே போன்று பணிக்கு சென்றாலும் சரி, எப்போது வீட்டை விட்டு வெளியில் சென்றாலும் மூக்கை நன்றாக மூடி முகக் கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும், எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அப்போதுதான் இந்த வைரஸ் தாக்கத்தலிருந்து நாம் விடுபட முடியும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. தங்கராஜ் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக் கதிரவன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி, கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் ஷோபா ஜென்சி, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

