தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்து வரும் ஆண், பெண் ஊர்க்காவல் படையினர் 30 பேருக்கு இன்று ரெங்கராஜ மஹாலில் சிறிய பண உதவி, அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.*
அப்போது அவர் பேசுகையில், கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது, அதற்காக தமிழக அரசு வரும் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதில் ஊர்க்காவல் படையினரின் பணி மிகவும் சிறப்பாக உள்ளது, எல்லோரும் இரவு, பகல் பாராமல் மிக சிறப்பாக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி காவல்துறைக்கு பெருமை சேர்த்து வருகிறீர்கள். முதலில் அதற்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் உங்களது ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டும். அதே போன்று பணிக்கு சென்;றாலும் சரி, எப்போது வீட்டை விட்டு வெளியில் சென்றாலும் மூக்கை நன்றாக மூடி முகக் கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும், எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அப்போதுதான் இந்த வைரஸ் தாக்கத்தலிருந்து நாம் விடுபட முடியும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.*
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் திரு. அன்னராஜ், உதவி ஆய்வாளர் சுரேஷ், திரு. வசந்தகுமார், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஜெகன் ஆகியோர் செய்திருந்தனர்.


