தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களை திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள இடும்பன் மண்டபத்தில் தங்க வைத்து மூன்று வேளையும் உணவு வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் சிறப்பு ஏற்பாடு.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்ஜெயக்குமார் திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உற்றார் உறவினர் இல்லாத உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர்களின்; வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோவில் வளாகத்தில் உள்ள இடும்பன் மண்டபத்தில் அவர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க வைத்தும், முக கவசம் அணிந்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் தங்கவைத்து அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்க கோவில் நிர்வாகத்தினர் மூலம் ஏற்பாடு செய்து அதன்படி நேற்று கோயில் வளாகத்தை சுற்றியுள்ள 100 ஆதரவற்றவர்களை மேற்படி திருமண மண்டபத்தில் தங்க வைத்து அவர்களுக்கு முதற்கட்டமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இரவு உணவு வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் இருந்து வருகிறது. இந்த கால கட்டத்தில் பலர் சிரமப்பட்டு வருகிறார்கள். சிரமப்படும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் தலைமையில் சிறப்பு சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கென 95141 44100 என்ற செல்போன் எண் கொடுக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பலர் பல்வேறு இடங்களிலிருந்து தங்களது தேவைகளை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கேட்ட உதவியை உடனடியாக செய்து வருகிறோம். நேற்று திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உற்றார் உறவினர் இல்லாத உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தினர், பேரூராட்சி பஞ்சாயத்து மற்றும் காவல்துறையினர் மூலம் இந்த ஊரடங்கு நாட்களில் அவர்களை இங்கேயே தங்க வைத்து மூன்று வேளை உணவு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையான சிலர் தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது போதைக்காக கிருமி நாசினி (Sanitizer) அருந்தி உயிருக்கு ஆபததை விளைவிக்கும் செயலில் யாரும் ஈடுபடுகின்றனர், பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும், கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் முழுமையாக அணிய வேண்டும், அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பால் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்வின் போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப, திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம் உட்பட காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாக உதவி ஆணையர் செல்வராஜ், திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், திருச்செந்தூர் தாசில்தார் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.


