தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து நகை, லேப்டாப் மற்றும் பணத்தை கொள்யைடித்த இருவர் கைது – ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் நகை, லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு – எதிரியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.*
*கடந்த 30.04.2021 அன்று தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்தானகிருஷ்ணன் (46) என்பவர் தனது வீட்டை பூட்டி ஊருக்கு சென்றுவிட்டு 02.05.2021 அன்று மீண்டும் விட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் முன் வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிற்குள் வைத்திருந்த 9 பவுன் எடை கொண்ட ஆறு தங்க வளையல்கள், ஒரு லேப்டாப், வெள்ளி குங்குமச்சிமிழ், மொபைல் போன் மற்றும் பணம் ரூபாய் 3000/- திருடப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சந்தானகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.*
*இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. வேல்ராஜ், திரு. சிவக்குமார், தலைமை காவலர் திரு. பென்சிங், முதல் நிலை காவலர்கள் திரு. செந்தில்குமார், திரு. மாணிக்கராஜ், திரு. மகாலிங்கம், திரு. சாமுவேல், காவலர் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.*
*அவரது உத்தரவின் பேரில் தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததிலும், மாவட்ட ஒரு விரல் ரேகைப் பதிவுக்கூட உதவி ஆய்வாளர்கள் சம்பவ இடத்தில் உள்ள கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்ததிலும் தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் ஆரோக்கிய செல்வ சதீஷ் (எ) சூப்பி (20) மற்றும் தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேரந்த ஜெயசீலன் மகன் டேனியல்ராஜ் (34) ஆகியோர் சந்தானகிருஷ்ணன் வீட்டை உடைத்து மேற்படி நகை, பணம் மற்றும் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடியது தெரியவந்தது. ஆகவே தனிப்படையினர் மேற்படி எதிரிகள் ஆரோக்கிய செல்வ சதீஷ் (எ) சூப்பி மற்றும் டேனியல்ராஜ் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் எடை கொண்ட 6 தங்க வளையல்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றினர்.*
*இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரிகள் செல்வ சதீஷ் (எ) சூப்பி இது போன்று பைக் திருட்டு உட்பட 8 திருட்டு வழக்குகளிலும், அதே போன்று டேனியல்ராஜ் என்பவர் கஞ்சா விற்பனை மற்றும் திருட்டு வழக்குகள் என 5 வழக்குகளிலும் சம்மந்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.*
*மேற்படி எதிரிகள் இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றிய தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.*

