தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் ஆசிரியர்களை கொரோனா கணக்கெடுப்பு பணியை வீடு வீடாகச் சென்று சேகரிக்க வேண்டும் என ஈரோடு கலெக்டர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரின் உத்தரவால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனாலும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி தினமும் ஆயிரகணக்கில் பொது மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமளைகளிலும் நோயாளிகளாக சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.கொரோனாவின் தீவிரம் காரணமாக தினமும் நூற்றுக்கணக்கில் இறப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சூழ்நிலைக்கேட்ப தமிழக அரசால் ஆலோசனைகள் வழங்கப்பட்டு நோயை கட்டுக்குள் கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் அறிவுறுத்தலின்பேரில் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள உத்தரவில் ‘ ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பணிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்று நோய் அறிகுறிகள் உள்ளதா என்பதை, அறிக்கையாக உரிய அதிகாரியிடம்சமர்ப்பிக்க வேண்டும். பணியை மேற்கொள்ளாத ஆசிரியர்களின் பெயர்கள்மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படும்’. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதனால் பயந்து போன ஆசிரியர்கள் அலறியடித்துக்கொண்டு கடும் வெயிலிலும் பணியை மேற்கொண்டனர். வீடு வீடாக சென்ற அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. பல்வேறு வீடுகளில் கொரோனா நோய் உள்ளவர்கள் எந்த வித தடுப்பு நடவடிக்கை இல்லாமல் நடமாடுவதும், தங்கள் விருப்பம் போல் சுற்றி திரிவதாகவும் அண்டை வீட்டினர் இரகசியமாக சொல்வது பேரதிர்ச்சியாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தரமான முககவசமோ, கையுறையோ, வெப்பத்தை அளவிடும் கருவியோ கொடுக்காமல் வெறுமனே பணியை மேற்கொள்ள கட்டாயப்படுத்துகின்றனர். மாநகராட்சி பணியாளர்கள் அவர்கள் பணியையும் இவர்களிடம் தள்ளி விடுகின்றனர்.
எதற்கெடுத்தாலும் கலெக்டரிடம் சொல்லி விடுவோம் என்று நேரிலும், போனிலும் இப்படி மிரட்டும் செயல் தொடர்வதாலும், குறிப்பிட்ட ஆசிரியர்களை மட்டும் இப்பணிக்கு செல்ல கட்டாயம் செய்வதால் பிரச்சனை
வெடித்தது. இதுகுறித்து ஆசிரியர்களின் சங்க கூட்டமைப்பினர் போர்க் கொடி
உயர்த்தினர்.
இதையடுத்து, விருப்பம் உள்ள ஆசிரியர்கள் இப்பணியை மேற்கொள்ளலாம்
என அறிவுறுத்தப்பட்டது. ‘ பாதுகாப்பு இல்லாமல் ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணி செய்வதுடன், 50 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் பல்வேறு உடல் ரீதியான உபாதைகள் மத்தியில் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள கட்டாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது’. என்றார்
பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர் சோமசுந்தரம்.


