மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியரின் அலுவலக பெருந்திட்ட வளாகம் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மற்றும் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் , கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ.மகாராஜன் ,பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து,மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை,நகர்ப்புற வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை,தமிழ்நாடு மின்சார வாரியம்,உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலத்துறை,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 30 சதவிகிதமாக இருந்த நோய்த் தொற்று தற்போது 20 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று குறித்து தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்துள்ளார்.
அதன்படி மாவட்டத்தில் பிடிபிசிஆர் பரிசோதனை இதுவரை 3,09,657 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு 33,116 நபர்கள் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 26,405 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 6,401 நபர்களில் 521 நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும், 877 நபர்கள் கொரோனா நல மையங்களிலும் 5,003 நபர்கள் தத்தமது குடியிருப்புகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட வருகின்றனர்.
மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 15 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு இதன் மூலம் 74,333 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 4,682 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் 218 கட்டுப்பாட்டுப்பாட்டு பகுதிகளும், நகர்ப்புற பகுதிகளில் 263 கட்டுப்பாட்டுப் பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளன. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல் குளோரின் பவுடர் இடுதல் பொது பாதைகளை அடைத்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பெரியகுளம்,போடிநாயக்கனூர், கம்பம் அரசு மருத்துவமனைகள், தேனி பழைய அரசு மருத்துவமனை, தப்புக்குண்டு, தேக்கம்பட்டி, போடிநாயக்கனூர் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை நல மையங்கள் மற்றும் வடவீரநாயக்கன்பட்டியில் சித்தா சிகிச்சை நல மையமும் அமைக்கப்பட்டு மொத்தம் 2,365 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு,கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களை உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தொற்று கண்டுள்ள நபர்களில் சில நபர்களுக்கு தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள இடவசதி இல்லாதவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்திடும் பொருட்டு மாவட்டத்தில் தேவதானபட்டி, ராஜதானி,கடமலைக்குண்டு, வீரபாண்டி,ஓடைப்பட்டி, தேவாரம், கூடலூர் மற்றும் டொம்புச்சேரி ஆகிய 8 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 138 படுக்கை வசதியுடன் கூடிய இடைக்கால கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்படின் உடனடியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்சமயம்,தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் நிலையம் செயல்பாட்டில் உள்ளது. அதனை அதிக்கப்படுத்துவதற்கான நடவடிக்கையும்,மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும்ää ஆக்ஸிஜன் நிலையம் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனை விரைவில் செயல்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் கரும்புஞ்சை நோய் தொடர்பாக தற்போது வரை யாரும் கண்டறியப்படவில்லை. இருப்பினும்,அதற்கான தடுப்பு மருந்துகள் வரவழைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்,முழு ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளதால் பொதுமக்களுக்கு காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்திட வேண்டும். தேனி மாவட்டத்தில் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் அதிகம் நடைபெறுவதால் அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்டவைகளை சரிவர மேற்கொள்ள வேண்டும். இதன்வாயிலாக நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளவும் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களின் உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்குள் வாராமல் தடுப்பதன் மூலமாகவும் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று பரவுவதை தடுத்திட முடியும்.
கொரோனா நோய் தொற்றிலிருந்து மீள்வதற்கு சவாலாக உள்ளது. இதிலிருந்து நம்மையும்,மக்களையும் காப்பாற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கும் போது மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லை என்றாலும் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதற்கு தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவரின் குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் பின்பு மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்று வழங்கினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு அரசால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் மாவட்ட நிர்வாகம் மூலமாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கொரோனா நோய்த் தொற்று குறித்த ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கட்டுப்பாட்டு அறையின் 24X7 மணி நேரமும் (04546-291971,94999 33869) பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ அவரச உதவி ,நோயாளிகளை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் , தடுப்பூசி மையம்,கோவிட் சிகிச்சை மையம் கோவிட் பரிசோதனை நிலையங்கள் படுக்கை வசதி போன்ற பல்வேறு விதமான சந்தேகங்கள் மற்றும் புகார்கள் இதன்மூலம் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கருதி தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தங்குதடையின்றி தொய்வின்றி சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்சமயம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனை பொதுமக்கள் முறையாக கடைபிடிப்பதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். மேலும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளில் களப்பணியாளர்கள் அரசு ஊழியர்கள் காவல் துறையைச் சார்ந்தவர்கள் ஆகியோர் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து தங்களையும் பாதுகாத்து கொண்டு பொதுமக்களை பாதுகாக்கும் பணியினையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாகவும், கூடுதலாக கொரோனா சிகிச்சை நல மையம் அமைப்பது, படுக்கை வசதி உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் மேம்பாடு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். இதனை பரிசீலித்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.மணி,பெரியகுளம் சார் ஆட்சியர் டி.சிநேகா, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பாலாஜிநாதன், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு. லட்சுமணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.எஸ்.செந்தில்குமார், உதவி இயக்குநர்கள் ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.
