தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே குலையன்கரிசல் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இங்கு சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெல், வாழை பயிரிட்டு வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றின் வடிகால் பகுதியில் அமைந்துள்ளதாலும், விவசாயம் செய்வதற்கு உகந்த கரிசல் மண் கொண்ட பூமியாக இருப்பதாலும் பல நூற்றாண்டுகளாக விவசாயத் தொழில் தலைத்தோங்கி வருகிறது. குலையன்கரிசல் கிராமத்தைச் சார்ந்தவர்கள் பெரும்பாலோனார் விவசாயத்தை நம்பியே தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.
விளைவிக்கப்படும் நெல்லிற்கு இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், விவசாயிகள் எளிதில் பணம் கிடைக்கும் வகையில், இப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கொரிக்கை விடுக்கப்பட்டதன் அடிப்படையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.
இப்பகுதியில் அரசின் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டவுடன், விவசாயிகள் வலம் பெறுவார்கள், விவசாயமும் வளர்ச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பு தற்போது தவிடுபொடியாகி உள்ளது.
கடந்த தை மாதம் முதல் நெல் அறுவடை செய்யப்பட்ட சுமார் 1000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை, குலையன்கரிசலில் உள்ள விவசாயிகள், அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொடுத்துள்ளனர். ஆனால், அரசு கொள்முதல் நிலைய அதிகாரிகளோ அவற்றை வாங்கிக்கொண்டு, பில் ஒன்றை கொடுத்து விட்டு, ‘உங்களது வங்கிக் கணக்கில் ஒருசில நாட்களில் பணம் செலுத்துவோம்’ என்று கூறியுள்ளனர்.
அதிகாரிகள் கூறியதை அப்படியே நம்பிய குலையன்கரிசல் விவசாயிகள் தினந்தோறும் தங்களது வங்கிக்கணக்கில் பணம் ஏறியுள்ளதா? என்று விசாரித்து வங்கி வாசலில் காத்துக்கிடக்கின்றனர். ஆனால், வங்கி ஊழியர்களோ உங்கள் கணக்கில் இன்னும் பணம் ஏறவில்லை, நாளை வாருங்கள் என்று கூறுகிறார்களாம்.
நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 3 மாத காலம் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு பணம் கையில் கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த வேதனையும், மன உளைச்சலும் அடைந்து வருகின்றனர்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை கூடுதலாக பணம் பெற்றுக் கொண்டு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.

தற்போது, கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வருடம் முழுவதும் வயல்காட்டில் சேரும் சகதியுமாக கஷ்டப்பட்டு உழைத்து நெல் பயிரிட்டு, அதில் கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்துவோர் ஏராளம்.
குலையன்கரிசல் கிராமத்தைப் பொறுத்த வரையில், பெரும்பாலோனோர் சிறு-குறு விவசாயிகளாகவே உள்ளனர். அவர்கள் நெல் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டே தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள்.
சிறு-குறு விவசாயிகள் பலர், தங்கள் விவசாயத்திற்காக உரம், நாற்று நட்டுதல், களைஎடுத்தல் போன்ற பணிகளுக்காக வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் கடன் தொல்லையால் தத்தளித்து வருகிறார்களாம்.
விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யும்போது எந்தப் பணமும் பெறக்கூடாது என்பது விதிமுறை. அதற்கு மாறாக பணம் கேட்பது ஏன் என்று காரணம் கேட்டால், ஏற்று, இறக்கு கூலிக்கு ரூ.15, எடை போட ரூ.10, அதிகாரிக்கு ரூ.15 என்றும் கூறுகின்றனராம்.
மீதத்தொகை யாருக்கு செல்கிறது என்பதும் தெரியவில்லை. இப்படியாக விவசாயிகளிடம் மோசடிகள் நடக்கின்றன. அன்னமிட்ட கைகளிடம் கையூட்டு பெறுவது வேதனையின் உச்சம்.
இந்நிலையில், குலையன்கரிசலில் இயங்கி வரும் அரசு நெல் கொள்முதல் நிலை
யத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கான தொகையை, விவசாயிகளின் வங்கிக்கணக்கிலோ அல்லது நேரிலோ விரைந்து வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரம் காத்திட அரசுக்கு பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சிறுகுறு விவசாயிகளின் நெல்லிற்கான பணத்தை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுப்பார் என காத்திருக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் துயர்துடைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி தொகுப்பு: செய்தி ஆசிரியர் டியோடின் ஐசக்


