சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிபிஐ வழக்கு, பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்குகள் தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 93 நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணமும், இவர்களின் உயர்கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக கடந்த 2018 மே 22ல் நடந்த போராட்டத்தில் 13 போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதோடு பலர் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேர் மற்றும் காயமடைந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலைகான பணி நியமன ஆணை முதல்வர் ஸ்டாலின் மூலம் வழங்கப்பட்டது. போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்தது மூன்றாண்டு நிறைவடைய உள்ள நிலையில் நேற்று இந்த பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி அருணாஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் இந்த போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் அவர்களின் கருத்தும், காவல்துறைத் தலைவரின் அறிக்கையும் பெறப்பட்டு அரசால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது.
மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருத்துரைகளின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பின்வரும் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்கள்.

