தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 742 நபர்களுக்கு ரூ.1.48 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200-ம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (மே 4) ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 219 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 74 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 53 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 47 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 97 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 128 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 101 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 23 பேர் மீதும் என மொத்தம் 742 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1லட்சத்து 48ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 6 பேர் மீதும், கோவில்பட்டி உட் கோட்டத்தில் ஒருவர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் ஒருவர் மீதும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மொத்தம் 8 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 4000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

