தென்காசி மாவட்டம் புளியங்குடி நடுக்கருப்ப அழகு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி கருமாரியம்மாள் (34). இவர் புளியங்குடியில் இருந்து வாசுதேவநல்லூருக்கு அரசு பஸ்சில் சென்றார். பஸ்சில் கருமாரியம்மாள் வைத்திருந்த மணிபர்சை யாரோ திருடி விட்டனர். அதில் 7 பவுன் நகை, செல்போன் மற்றும் பணம் இருந்தது. மணிபர்சை காணாமல் தவித்த கருமாரியம்மாள் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்பாண்டியன், நவமணி ஆகியோர் அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது பஸ்சில் போலீசார் ஏறியவுடன் மணிபர்சை எடுத்த நபர் பஸ்சிற்குள்ளே மணிபர்சை போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். பஸ்சிற்குள் கிடந்த மணிபர்சை எடுத்து பார்த்தபோது, அதில் 7 பவுன் நகை, செல்போன் மற்றும் பணம் இருந்தது. இதனையடுத்து அவற்றை கருமாரியம்மாளிடம் போலீசார் ஒப்படைத்தனர். திருடுபோன 7 பவுன் நகை, செல்போன், பணத்தை 20 நிமிடங்களில் மீட்ட வாசுதேவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்பாண்டியன், நவமணி ஆகியோரை பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

