தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியில், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 27 பேருக்கு நிவாரணத் தொகையாக தமிழக அரசு ரூபாய் 9 லட்சம் வழங்கியுள்ளது. இந்த நிவாரணத் தொகையை வங்கி வரைவோலையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று (23.04.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.
இதில் தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்த பழனிமுருகன் மனைவி காசி ராமுதாய் (38) என்பவரை கடந்த 17.06.2019 அன்று எதிரிகள் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதே போன்று எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதயில் விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரம் புதூர் வடக்கு தெருவை சேர்ந்த முத்தையா மகன் சின்னராஜா என்பவரை கடந்த 07.08.2017 அன்று எதிரிகள் கொலை செய்ய முயன்றுள்ளனர். மேற்படி வழக்குகள் உட்பட 27 குற்றவியல் வழக்குகள் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரி திரு. சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர்கள் மயில்குமார், கணேசபெருமாள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.



