தூத்துக்குடியில் ரூ.1,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
பனாமா நாட்டிலிருந்து மரத்தடிகள் ஏற்றிக்கொண்டு இலங்கை வழியாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்த கப்பலிலிருந்த சரக்குப் பெட்டகங்களில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனா். அதில், ஒரு சரக்குப் பெட்டகத்தில் 9 பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 302 கிலோ கொக்கைன் என்ற போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அப் பெட்டகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, அவற்றைப் பாதுகாப்பாக தனியாா் சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், மரத்தடிகள் இறக்குமதி செய்வதற்காக பதிவுசெய்யப்பட்டிருந்த தென்காசி, தூத்துக்குடியைச் சோ்ந்த 2 நிறுவனங்களின் அதிகாரிகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று துறைமுகத்துக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனா். பிடிபட்ட போதைப்பொருளின் சா்வதேச சந்தை மதிப்பு சுமாா் ரூ. 1,500 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இச்சம்பவத்தில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் இதுவரை பறிமுதலான போதைப்பொருள்களில் இதுவே அதிக மதிப்பிலானது ஆகும். இச்சம்பவத்தில் இலங்கையைச் சோ்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடா்பிருக்கலாம் என மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனா். அதன் அடிப்படையிலும் விசாரணை நடைபெறுகிறது.

