தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை சிந்தலக்கட்டை முருகையா நகர் பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் சேகர் (எ) கொம்பன் (55) என்பவர் கடந்த 22.03.2021 அன்று சொத்து பிரச்சினை காரணமாக அவருடைய சகோதரரான சின்னதுரை மனைவி ராமலெட்சுமி (40) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சேகர் (எ) கொம்பன் என்பவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பாலதண்டாயுத நகரை சேர்ந்த சண்முகம் மகன் அஜய் (எ) மாடசாமி (40) மற்றும் லெட்சுமணன் மகன் சண்முக விக்னேஷ் (எ) விக்னேஷ் (23) ஆகியோர் கடந்த 31.03.2021 அன்று 1ம் கேட் காந்தி சிலை அருகே வந்துகொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தராததால் அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அஜய் (எ) அஜய் மாடசாமி மற்றும் சண்முக விக்னேஷ் (எ) விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
தூத்துக்குடி ஆனந்தா நகரை சேர்ந்த சாந்தகுமார் மகன் அப்பு (எ) அப்பன்ராஜ் (31) என்பவர் கடந்த 23.03.2021 அன்று டேவிஸ்புரம் பகுதியில் வந்துகொண்டிருந்த ஓருவரை வழிமறித்து அரிவாளை காட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பன்ராஜை கைது செய்தனர்.
மேற்கண்ட வழக்குகளின் முக்கிய எதிரிகளான சேகர் (எ) கொம்பன், அஜய் (எ) மாடசாமி, சண்முக விக்னேஷ் (எ) விக்னேஷ், அப்பு (எ) அப்பன்ராஜ் ஆகிய 4பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் 4பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கி. செந்தில் ராஜ் உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் 4பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையிலடைக்கப்பட்டனர்.

