கூட்டாம்புளியில் உள்ள “அன்பு உள்ளங்கள்” ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்து, அங்குள்ளவர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கான விழிப்பணர்வு ஏற்படுத்தினார்.
கூட்டாம்புளி அன்னை தெரசா நகரில் “அன்பு உள்ளங்கள்” என்ற ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இவ்வில்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர்கள் என சுமார் 150க்கும் மேற்பட்டவர்களை அன்பு உள்ளத்துடன் ஆதரித்து வருகின்றனர். மேலும் ஆதரவற்ற நிலையிலிருந்த பலரை காவல்துறை சார்பாகவே இங்கு ஒப்படைத்து, சிலர் நல்ல நிலைமைக்கு வந்து வீடு திரும்பியுள்ளனர். சிலர் இன்னும் அங்கேயே பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த இல்லத்தில் உள்ளவர்களை பராமரிப்பதற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் உதவி செய்து வருகின்றனர். அதே போன்று இல்லத்திற்கு திரு. தேவதாஸ் சந்திரசேகர், அவரது மனைவி திருமதி. ராணி தேவதாஸ் ஆகியோர் இந்த இல்லத்திற்கு சமையலறை கட்டிடம் கட்டிக்கொடுத்துள்ளார். மேற்படி கட்டிடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பின் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அங்குள்ள அனைவருக்கும் 1500 முகக்கவசங்களை ‘அன்பு உள்ளங்கள்” நிர்வாகி திருமதி. விஜயா அவர்களிடம் வழங்கினார். மேலும் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கொரோனா வைரஸ் பரவல் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஆகவே அனைவரையும் எப்போதும் சமூக இடைவெளியுடன் இருக்குமாறும், முகக்கவசம் அணிந்து இருக்குமாறும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யுமாறும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு, அவர்களுக்கு அவ்வப்போது கபசுரக்குடிநீர் வழங்க வேண்டும் என்று அன்பு உள்ளங்களின் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். மேலும் அங்குள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்து, இங்குள்ளவர்களை அன்பு உள்ளத்தோடு ஆதரித்து வரும் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி கூறி பாராட்டினார். இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கணேஷ் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பு உள்ளங்கள் நிர்வாகி திருமதி. விஜயா, அறங்காவலர் திருமதி. தங்கதீபா, சமூக பணியாளர் திரு. அன்டோ மார்ட்டின் மற்றும் இல்ல உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கூட்டாம்புளி சேகர குரு திரு. வெல்லிங்டன் ஜோசப், திரு. தேவதாஸ் சந்திரசேகர், திருமதி. ராணி தேவதாஸ், புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. மீனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


