ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் கரோனா 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,16,130 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், மருத்துவ சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு பொது மருத்துவமனைகளில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கரோனா நோயாளிகளை காப்பாற்றும் வகையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ரயில்களில் ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

