தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏறப்ட்டது.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (44), இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது திடீரென அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றினார். இதையடுத்து சிப்காட் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், “எனக்கு சொந்தமான லாரியை மாப்பிள்ளை யூரணியைச் சேர்ந்த ரேசன் கடை ஊழியரான சுப்பிரமணியன் என்பவர் பைனான்ஸ் கட்டிக் கொள்வதாக கூறி வாங்கினார். ஆனால் பணத்தை கட்டவில்லை. இதனால் பைனான்ஸ் கம்பெனியினர் எனது வீட்டை ஜப்தி செய்ய வந்துவிட்டனர். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் தீ்ககுளிக்க முயன்றதாக கூறினார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

