வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரை போன்று சாலைகளின் மையங்கள் மற்றும் பாலங்களில் தாவரங்களை வளர்த்து பசுமைப்போர்வையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சித்திரை பிறந்து விட்ட நிலையில், வெப்பநிலை 110 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து விட்டது. வீடுகளை விட்டு வெளியில் வந்து நடமாடவே முடியாது என்ற நிலை ஒருபுறம் இருக்க, வீடுகளுக்கு உள்ளேயேயும் இருக்க முடியாது என்ற அளவுக்கு வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் கடுமையில் இருந்து மக்களைக் காப்பதற்கான பசுமை செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
மரங்களை அதிக அளவில் நட்டு வளர்ப்பதன் மூலம் கோடைக்கால வெப்ப நிலையில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும். மேலும், கட்டங்களுக்குள் தேவைப்படும் குளிர்சாதனத் தேவையில் 30 விழுக்காட்டைக் குறைக்க முடியும்..
தமிழ்நாட்டில் வேலூர், சேலம், திருத்தணி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களை சுற்றியுள்ள மலைப்பகுதிகளையும், சமுதாயக் காடுகளையும் பசுமைப் பகுதிகளாக மாற்றி, அவற்றில் அதிக மரங்களை வளர்க்க வேண்டும். அதன் மூலம், மலையோர நகரங்களின் வெப்பத்தை குறைக்க முடியும்.
சென்னை போன்ற மக்கள் அடர்த்தி மிக்க நகரங்களில் காடுகளை வளர்க்க முடியாது என்றாலும் கூட, அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்படும் போது ஒதுக்கப்படும் திறந்தவெளி பரப்புக்கான நிலங்களில் மியாவாக்கி முறையில் நகர்ப்புற அடர்வனங்களை உருவாக்கலாம். சிங்கப்பூரில் இருப்பதைப் போன்ற சாலைகளின் மையங்களிலும், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் பசுமைப் போர்வையை ஏற்படுத்தி வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்,

