மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் அங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மேலும் திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் யானை, காமதேனு, யாழி, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் காலை, இரவு நேரங்களில் வலம் வருவர்.
தற்போது கொரோனா நோய் பரவலையொட்டி சித்திரை திருவிழா கோவிலுக்குள் உள்திருவிழாவாக நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன புறப்பாடு காலை, இரவு நேரங்களில் கோவிலுக்குள் ஆடி வீதியில் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் கோவில் நிர்வாகம் அனுமதி நேரத்தில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்.
மேலும் கொரோனா பரவலையொட்டி கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வருகிற 30-ந் தேதி வரை காலை 6 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பூஜை காலங்கள், திருவிழா புறப்பாடு காலங்கள் நீங்கலாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் பொதுதரிசனத்திற்கு கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி வழியாகவும், சிறப்பு தரிசன கட்டணச்சீட்டு பெற்றவர்கள் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். மேற்கு, வடக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதியில்லை.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்தும், வெப்பநிலை பரிசோதனை, கிருமிநாசினிகளால் கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு உட்பட்ட முதியவர்கள், நோய்வாய்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதியில்லை. பக்தர்கள் தேங்காய், பழம் கொண்டு வருவதற்கும், அர்ச்சனை செய்வதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு எந்த இடத்திலும் உட்கார அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

