தூத்துக்குடியில் தனியாா் ஏற்றுமதி நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 87 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிகால் ஏற்றுமதி – இறக்குமதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் மற்றும் கிடங்கு, தூத்துக்குடி சிப்காட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கிடங்கில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 நாட்களாக தீணை அணைக்கும் பணி நடந்தது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிபத்தில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 52 நிறுவனங்களுக்கு சொந்தமான ஆயத்த ஆடைகள், பொம்மைகள், காகித பண்டல்கள், ரப்பா் ஷீட்டுகள் உள்ளிட்ட 87 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக சிகால் நிறுவனத்தின் மேலாளர் சுரேஷ் என்பவர் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

