பெருமாநல்லூர் அருகே வேனுடன் ரியல் எஸ்டேட் அதிபரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி மற்றும் உறவினரை போலீசார் கைது செய்தனர். ரூ.1½ கோடி கடனை அடைக்க நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம், துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 60). இவர் அந்த பகுதியில் சொந்தமாக விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருடைய மனைவி ஜோதிமணி (55). இவர்களது மகன்கள் கருப்பசாமி மற்றும் நந்தகுமார். இவர்கள் இருவரும் கணினி என்ஜினீயர்கள். இதில் கருப்பசாமி அமெரிக்காவில் வசித்து வருகிறார். நந்தகுமார் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். சமீபத்தில் ரங்கராஜன் ரூ.50 லட்சத்தில் வீடு கட்டி உள்ளார். மேலும் தொழில் காரணமாக அவருக்கு ரூ.1½ கோடி கடன் இருந்துள்ளது.
கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து ரங்கராஜனிடம் வந்து, கடனை திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரங்கராஜன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் ரங்கராஜன் சத்தியமங்கலம் அருகே உள்ள கடத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் ரங்கராஜன் மோட்டார் சைக்கிளுடன் சாலையோர பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் விடிய விடிய ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள், ரங்கராஜன் விபத்துக்குள்ளாகி கிடப்பதை பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து குணமடைந்த ரங்கராஜன் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ரங்கராஜனின் மனைவி ஜோதிமணி (55), ரங்கராஜனின் தங்கையின் மருமகன் ராஜா (40) ஆகியோர் இரவு 7 மணிக்கு கோவையில் இருந்து துடுப்பதிக்கு ரங்கராஜனை வேனில் அழைத்து வந்தனர். வேனை ராஜா ஓட்டினார்.
வேனின் பின் இருக்கையில் ரங்கராஜன் படுத்து இருந்தார். இவர்களுடைய வேன் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் வலசுபாளையம் பிரிவு அருகே வந்தது. அப்போது வேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்து விட்டதாகவும், தீயில் ரங்கராஜன் சிக்கிக்கொண்டதாகவும், எனவே உடனே காப்பாற்ற வருமாறு அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கும், பெருமாநல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீப்பிடித்து எரிந்த வேனை அணைத்தனர். அப்போது வேனுக்குள் உடல் கருகிய நிலையில் ரங்கராஜன் இறந்து கிடந்தார்.
ஆனால் ஜோதிமணிக்கும், ராஜாவுக்கும் லேசான தீக்காயம் கூட ஏற்படவில்லை. எனவே, சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கடன் தொல்லையில் மனவேதனையில் இருந்த ரங்கராஜன் தன்னை கொன்று விட்டால் நீங்கள் சந்தோசமாக வாழலாம். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்க மாட்டார்கள் என்று மனைவியிடம் கூறி உள்ளார்.
அதன்படி, ஜோதிமணி கணவரின் தங்கை மருமகனான ராஜாவிடம் இதுபற்றி கூறி கணவரை கொல்ல ரூ.1 லட்சம் பேரம் பேசி ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்துள்ளார். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்தவுடன் வேனை நிறுத்தி 2 பேரும் கீழே இறங்கிக்கொண்டனர். உள்ளே இருந்த ரங்கராஜன் மீதும், வேன் மீதும் பெட்ரோலை ஊற்றி ராஜா தீயை பற்ற வைத்தார். இதில் தீ மளமள வென்று எரிந்தது. இதில் உடல் கருகி ரங்கராஜன் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ரூ.1½ கோடி கடனை அடைக்க மனைவியே கூலிக்கு ஆள் வைத்து, கணவரை உயிரோடு எரித்துக்கொன்று விட்டு வேன் தீப்பிடித்ததாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

