இரு இளைஞர்களை கருணையின்றி கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : அரக்கோணம் அருகே சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன், சூர்யா ஆகிய இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் அரசியல் காழ்ப்புணர்ச்சி, சாதி வன்மத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.
தமிழகத்தில் இத்தகைய மனிதாபிமானமற்ற தாக்குதல் அரங்கேறியது மிகுந்த வேதனையளிக்கிறது. சாதி, மத, இன, மொழி, பேதங்களுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையும், சமத்துவ சிந்தனையும் மக்களிடம் வேரூன்ற வேண்டுமென விரும்பும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது.
குற்றவாளிகளுக்கு விரைவாக நிறைவேற்றப்படும் தண்டனையின் வாயிலாக இனி தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். பாதிக்கபட்டவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

