தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச் காலனியில் திருடுபோன சுமார் ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான 17 சவரன் தங்க நகைகள் உரிமையாளரிடம் நேரில் ஒப்படைப்பு – திருடிய நபரை கைது செய்து நகையை மீட்க விவேகமாகவும் விரைந்தும் செயல்பட்ட தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு.
தூத்துக்குடி ரோச் காலனி பகுதியைச் சேர்ந்த ரீகாந்த் மனைவி ஆஷா (30) என்பவர் கடந்த பிப்ரவரி 2ம்தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஆஷா கழுத்தில் இருந்த 17 சவரன் தங்க நகையை பறித்து விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து ஆஷா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், காவலர்கள் செந்தில்குமார், திருமணிராஜன், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துபாண்டி, வடபாகம் காவல் நிலைய காவலர் திரு. ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவரை கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்டையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதிலும், சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததின் மூலமும் தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் பகுதியை சேர்ந்த சுடலைமணி மகன் நயினார் (21) என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்படி எதிரியை கைது செய்து அவரிடமிருந்த சுமார் ரூபாய். 6,00,000/- மதிப்பிலான 17 சவரன் தங்க நகை கைப்பற்றப்பட்டது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில், மேற்படி திருடு போன சுமார் ரூபாய். 6,00,000/- மதிப்பிலான 17 பவுன் நகையை, அதன் உரிமையாளரான ரீகாந்த் மனைவி ஆஷா என்பவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஒப்படைத்தார். ஆஷாவின் கணவர் ரீகாந்த்தும் உடன் வந்திருந்தார்.
இவ்வழக்கில் விவேகமாகவும், விரைந்தும் செயல்பட்டு, திருடி சென்ற நபரை கண்டு பிடித்து நகையை மீட்ட தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், முத்து கணேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், தனிப்பிரிவு தலைமை காவலர்கள் கந்த சுப்ரமணியன், மாரிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



