திருச்சி, கோவை மண்டல ஐஜிக்களை அதிரடியாக மாற்றம் செய்து தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை புதிய ஐஜியாக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அது தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவு விவரம் வருமாறு:–
மத்திய மண்டலமான திருச்சி ஐஜி ஜெயராம் அங்கிருந்து மாற்றப்பட்டு அவருக்குப்பதிலாக தீபக் தாமோர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டலமான கோவை ஐஜி தினகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு, ஐஜி அமல்ராஜ் அங்கு அமர்த்தப்பட்டுள்ளார். மேலும் கோவை எஸ்பி அருளரசு அங்கிருந்து மாற்றப்பட்டு செல்வநாகரத்தினம் கோவை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். ஜெயராம், தினகரன், அருளரசு ஆகியோர் டிஜிபி அலுவலக தலைமையிட காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும்வரை இந்த மூவருக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவு இல்லாமல் தேர்தல் பணி வழங்கக்கூடாது. மேலும் திருச்சி போலீஸ் கமிஷனராக, லோகநாதனுக்குப் பதிலாக ஐ.ஜி அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள அமல்ராஜ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக தலைமையிட கூடுதல் கமிஷனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






