அதிமுக அரசு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு அதிகளவு இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் வாழும் மாற்றுச் சமுதாய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை வெளிப்படுத்தும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கருப்பு கொடி ஏந்தி அதிமுகவிற்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அந்த அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செய்துங்கநல்லூர் மற்றும் தூதுகுழி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார கிராமங்களில் அதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு வீடுகளிலும் கருப்பு கொடி ஏந்தி தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
இன்று செய்துங்கநல்லூர் தூதுகுழி பகுதியில் அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டார். இவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்பு அந்தப்பகுதி பொதுமக்கள் அதிமுகவிற்கு கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்த இடங்களுக்கு நேரில் சென்ற செய்தூங்கநல்லூர் போலீசார் கொடியை அகற்றுமாறு கிராம மக்களிடம் வலியுறுத்தினர். அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு வருகிறார் ஆகையால் தாங்கள் கட்டியுள்ள கொடியை அகற்றுமாறு காவல் சார்பில் கூறப்பட்டதாம். இதனால், அப்பகுதி கிராம மக்கள் எங்களுடைய உரிமைக்காக ஜனநாயக முறைப்படி எங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் எங்கள் வீடுகள் மற்றும் கடைகளில் கட்டிய கொடியை ஏன் அகற்ற வேண்டும் என கேள்வி கேட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேசன் வருகை வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார்.
கிராம மக்கள் அதிமுக வேட்பாளருக்கு நீங்கள் ஆதரவாக செயல்படுகிறீர்களா? என காவல்துறையிடம் கேட்டனர். நாங்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டமோ அல்லது போராட்டமோ, சாலை மறியலோ செய்யவில்லை. எங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்காக அகிம்சை வழியில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், எங்கள் இல்லங்களிலும், கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றுவது என்ன தவறு என கிராம மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இதனால் செய்துங்கநல்லூர் தூதுகுழி பகுதி பொதுமக்கள் அதிமுக அரசிற்கு எதிரான மனநிலை உள்ளதால், இந்தமுறை ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வாக்குவங்கி குறையும் என்று பேசப்படுகிறது.


