தூத்துக்குடி நாசரேத் பகுதியில் புதையல் இருப்பதாக வீட்டில் குழிதோண்டி குழிக்குள் இறங்கி 2 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர் – சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருவள்ளுவர் காலனி 5வது தெருவை சேர்ந்தவர் முத்தையா (80). இவருக்கு சிவ மாலை (40) மற்றும் சிவவேலன் (37) ஆகிய இரு மகன்கள். இதில் சிவமாலை குறிபார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் குறிபார்த்ததில் தங்களது வீட்டிற்கடியில் புதையல் இருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து அதை நம்பி சகோதரர்கள் இருவரும் அவர்களது நண்பர்களான குமந்தா நகர் பகுதியை சேர்ந்த கந்தவேல் மகன் லட்சுமணன் (எ) ரகுபதி (37) மற்றும் பண்ணம்பாறை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் நிர்மல் கணபதி (17) ஆகியோருடன் சேர்ந்து சுமார் 6 மாத காலமாக வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதையலை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் 28.03.2021 அன்றும் புதையலை தேடி சகோதரர்கள் சிவமாலை, சிவவேலன், அவரது நண்பர்கள் லட்சுமணன் (எ) ரகுபதி, நிர்மல் கணபதி மற்றும் சிவவேலனின் மனைவி ரூபா ஆகியோர் குழி தோண்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் 5 பேரும் மேலே வராததால் குழியில் பார்த்த போது 5 பேரும் மூச்சு திணறி மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாசரேத் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழிக்குள் இருந்த அனைவரையும் மீட்டனர். இதில் லட்சுமணன் (எ) ரகுபதி மற்றும் நிர்மல் கணபதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்ற மூவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.


