தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 2 டன் மஞ்சள் மூடைகளை கடத்த முயன்ற 4பேரை போலீசார் கைது செய்துனர்.
இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க கடலோர காவல் படையினர் மற்றும் போலீஸார் கடலோர பகுதியில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடிதிரேஸ்புரம் முத்தரையன் காலனி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் மஞ்சள் மூட்டைகள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் விஜய வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மினி வேனை போலீசார் சோதனையிட்டபோது, அதில் 30கிலோ வீதம் 70 மூடைகளில் கஸ்தூரி மஞ்சள் இருப்பது தெரியவந்தது. போலீஸாரை பார்த்ததும் அவர்களின் ஒருவன் தப்பி விட்டான். இதையடுத்து மஞ்சள் மூடைகள் மற்றும் வேனில் வந்த 4பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து தூத்துக்குடி தருவைகுளம் மறைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மேட்டுப் பட்டியைச் சேர்ந்த முகம்மது சுல்தான் மகன் நூருல் அமீன் (37), ஈரோடு செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வாசுதேவன் மகன் தனபாண்டி (28), சிவகங்கை மாவட்டம், பெருமாள்பட்டியைச் சேர்ந்த அழகன் மகன் முருகேஷ் (24), தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதா நகரைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் ஜெயக்குமார் (48) என்பதும் இலங்கைக்கு மஞ்சள் மூடைகளை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 4பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் தப்பியோடிய தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பின்னர் அந்த மஞ்சள் மூடைகள் சுங்க இலகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம் எனக் கூறப்படுகிறது.

