திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில்நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து, வள்ளியம்மன் தவசுக்கு புறப்பாடு மற்றும் காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், நடைபெற்றது.
மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு திருக்கோயிலில் இருந்து அம்மனை அழைத்து வர சுவாமி புறப்பாடாகி, பந்தல் மண்டபம் முகப்பில் வைத்து, சுவாமி அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடா்ந்து, சுவாமி, அம்மன் திருவீதி வலம் வந்து, இரவு 10 மணிக்கு மேல் 108 மகாதேவா் சன்னதி முன்பு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு இராக்கால அபிஷேகம் நடைபெறாது.
இந்துக்களின் குலதெய்வ வழிபாடான இந்நாளில் திருச்செந்தூா் முருகப்பெருமானை பக்தா்கள் தரிசனம் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு பொது முடக்கத்தால் திருக்கோயிலில் தரிசனத்துக்கு அனுமதியில்லாததால் நிகழாண்டில் சுவாமியை தரிசனம் செய்ய காலை முதலே அதிகளவில் பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் இருந்தனா். இதனால் திருக்கோயில் வளாகத்தில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

