திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறப்பு பற்றி அருவருக்கத்தக்க வகையிலும் ஆபாசமாகப் பேசியதும் தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழி கண்டனம்
முதல்வரின் பிறப்பு குறித்து, ராஜா ஆபாசமாக பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு, தி.மு.க., மகளிரணி தலைவியும், எம்.பி.,யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும், பெண்களை இழிவுபடுத்தி, தனிப்பட்ட முறையில், விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லாருமே, மனதில் வைத்துக் கொண்டால், இந்த சமூகத்திற்கு நல்லது. இது தான் திராவிட இயக்கமும், ஈ.வெ.ரா.,வும் விரும்பிய சமூக நீதி’ என, கனிமொழி கூறியுள்ளார்.
கடுமையாக எச்சரித்த ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..
அதில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாகரிகமற்ற முறையில் தரக்குறைவாகப் பேசிய ஆ.ராசாவுக்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவி வெறியில் அவரது உளறல் மூலம் எந்த அளவிற்கு அவரும் திமுகவும் தரம் தாழ்ந்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தரக்குறைவான சொற்களால் வசைபாடுவதால் பேசப்படுபவர் ஒருபோதும் குறைந்து போவதாய் அர்த்தமல்ல. மாறாக அது பேசுபவருடைய அறிவீனத்தையே பிரதிபலிக்கும். மக்களின் பிரதிநிதியாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர் சபை நாகரிகத்துடனும், அரசியல் மாண்புடனும் நடந்துகொள்ள வேண்டும். தனது சுய வாழ்வில் முதலில் தாம் சரியாக இருக்கிறோமா என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு பேசவேண்டும். இனியேனும் இப்படி தரமற்ற முறையில் பேசுவதை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவரை கடுமையாக எச்சரிக்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ், பா.ம.க.,
மு தல்வர் இ.பி.எஸ்., மற்றும் ஸ்டாலினையும் ஒப்பீடு செய்யும் வகையில், ஆ.ராசா தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் அருவருக்கத்தக்கவை. களத்தில் பேசப்பட வேண்டியவை, பிரச்னைகள் தானே தவிர, பிறப்புகள் குறித்த அவதுாறுகள் அல்ல. முதல்வரை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லாததால் தான், தி.மு.க., இத்தகைய அருவருக்கத்தக்க, ஆபாசமான, இழிவான பரப்புரையை முன்னெடுத்திருப்பதாக தோன்றுகிறது.தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் தான், தி.மு.க.,வினரை, இத்தகைய இழிவான தனி நபர் தாக்குதல்களில் ஈடுபட வைக்கிறது. இது, அரசியல் நாகரீகமல்ல.
குமுறும் தங்கர் பச்சான்.
எப்படியாவது வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இன்றைய அரசியல்வாதிகள் பேசும் பேச்சுக்களை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வரின் தாய் மீது முந்நாள் நடுவண் அமைச்சர் ஆ. ராசா அவர்கள் வீசியுள்ள பழிச்சொல்லை திமுகவில் உள்ளவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!
சொல்வதற்கே வாய் கூசும் அவரது தொடர்ச்சியான தரம் தாழ்ந்த பேச்சுக்கள் போல் மற்றவர்களும் பேசத் தொடங்கிவிட்டால் அதையும் இந்த மக்கள் கேட்டுக்கொண்டுதான் வாழ வேண்டுமா? தலைமையில் உள்ளவர்கள் அவரது பேச்சினை கண்டிக்காததும், ஊடகங்கள் அது குறித்துப்பேச மறுப்பதும் தமிழக அரசியல் முழு கொள்ளை வணிகமாக மாறிப்போனதையே பறைசாற்றுகின்றன. இப்படியே போனால் பகுத்தறிவுப் பாசறையில் பாடம் பயின்றதாக கூறிக்கொண்டு பெருந்தலைவர்களின் படங்களை இனி பயன்படுத்துவதில் எவ்வித நியாயமும் இருக்காது என திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் முகநூல் பக்கத்தில்;- ஆ.ராசாவின் செயல் அநாகரீகமானது தவசியம்மாள் குறித்த ராசாவின் பேச்சு கொங்கு நாட்டு பெண்களை கேவலப்படுத்தும் செயலாகும். திமுகவிலிருந்தாலும் சுயமரியாதையுடன் எதிர்க்கிறேன் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
திமுகவுக்கு தமிழக மக்களிடையே செல்வாக்கு உயர்ந்து வரும் வேளையில், ஆ.ராசா போன்றோரின் தரங்கெட்ட பேச்சு, திமுகவுக்கு அவப்பெயர் மட்டுமின்றி, தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக வலைதளங்களில் திமுக அனுதாபிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அதிமுக அனுதாபிகளோ, ஆ.ராசாவின் பேச்சு அத்துமீறியது. இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆவேசமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


