நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலையிலிருந்து திடீரென இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அளவு சற்று அதிகரித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து திடீரென்று மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணைப் பகுதியில் 7 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இதே போல் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், மேலகரம் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. ஏற்கனவே வெயில் வாட்டி வந்ததால் அனைத்து அருவிகளிலும் மிகக்குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்தது. இன்று காலை நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அளவு சற்று அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான இன்று குற்றால அருவிகளில் குளிக்க அதிக சுற்றுலா பயணிகள் திரண்டனர். ஏற்கனவே கடும் வெயில் காரணமாக அதிக வெப்பத்தால் அவதிப்பட்ட மக்கள் குறைந்த அளவு விழுந்த தண்ணீரிலும் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்தது. இன்று அதிகாலை காயல்பட்டினம் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 10.4 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவானது.
நெல்லை மாநகரில் கோடை வெயிரை தணிக்கும் வகையில் சில பகுதிகளில் இன்று காலையிலிருந்து மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது.


