ஸ்ரீீவைகுண்டம், மார்ச் 28- திமுகவும், அதிமுகவும் அவர்கள் செய்த ஊழல்கள் குறித்து அவர்களே ஒருவரைக்கொருவர் மாறி மாறி திட்டி கொண்டிருக்கின்றனர் என்று குரும்பூரில் நடந்த பிரசாரத்தில் ராதிகா சரத்குமார் பேசினார்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மையம் கூட்டணி வேட்பாளராக ஜெயந்திகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை செயலாளர் ராதிகா சரத்குமார் நேற்று குரும்பூரில் பிரசாரம் செய்தார். முன்னதாக குரும்பூர் பஜாரில் பிரசாரத்திற்கு வந்த ராதிகா சரத்குமாரை சமக ஆழ்வை ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் பெண்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
தொடர்ந்து ராதிகா சரத்குமார் வேட்பாளர் ஜெயந்திகுமாரை ஆதரித்து திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது& 50 வருடங்களாக மக்களாகிய நீங்கள் அதிமுக அல்லது திமுகவுக்கு மாறி மாறி வாக்களிக்கிறீர்கள். ஆனால் இந்த முறை மக்களே சிந்தித்து செயல்படுங்கள். ஏனென்றால் அந்த 2 கட்சியிலும் பிரதான தலைவர்கள் இல்லை. இதனால் இரு கட்சிகளும் என்ன செய்வதன்றே தெரியாமல் உள்ளனர். நாங்கள் யாரையும் திட்டி பிரசாரம் செய்யவில்லை. அதற்கு மாறாக திமுகவும், அதிமுகவும் அவர்கள் செய்த ஊழல்கள் குறித்து அவர்களே ஒருவரைக்கொருவர் மாறி மாறி திட்டி கொண்டிருக்கின்றனர்.
அரசியலே வேறு விதத்தில் சென்று கொண்டிருக்கிறது. இன்று நாங்கள் ஒரு கூட்டணி அமைத்துள்ளோம். அதுதான் மக்கள் நல கூட்டணி. மக்கள் நீதி மையம், சமக, இந்திய ஜனநாயக கட்சியும் இணைந்து மாற்றத்தை உருவாக்குவோம் என்ற கூட்டணியை அமைத்துள்ளோம். இதன் மூலம் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம். நேர்மையாக செயல்பட கூடிய எங்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வேட்பாளர் ஜெயந்திகுமார், மாவட்ட செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர் துரைராஜ், அவைத்தலைவர் சங்கர், ஆத்தூர் நகர செயலாளர் முத்துக்குமார், அவைத்தலைவர் அருள், பஞ்., செயலாளர் ராமச்சந்திரன், காமராஜ், ம.நீ.மை ஒன்றிய செயலாளர் முத்துவேல், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பிரேமா, நகர செயலாளர் ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


