தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு தூத்துக்குடி காமராஜர் கலை அறிவியல் கல்லூரியிலும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வீரபாண்டியபட்டிணம் ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியிலும், நேற்று நடைபெற்றது.
இப்பயிற்சி மையங்களை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், நேரில் சென்று பயிற்சி வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்குசாவடி அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கலெக்டர் வழங்கினார்.
கடந்த தேர்தலின்போது 1603 வாக்குசாவடிகள் இருந்தது. கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதால் தேர்தல் ஆணையம் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை இரண்டாக பிரிக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில் தற்போது 2097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் மொத்தம் 10064 வாக்குசாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மண்டல அலுவலர்கள், காவல் துறையினர், பறக்கும் படையினர் என 6000க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளார்கள். மேலும் கூடுதலாக காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளும், தன்னார்வலர்களும் என 4000 நபர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 20000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அலுவலர்கள், பணியாளர்கள், காவல் துறையினர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர்செந்தில்ராஜ் தெரிவித்தார்.

