தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்கள் உட்பட தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 இடங்களில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல கொள்ளையன் கைது – ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 19 சவரன் தங்க நகைகள் மீட்பு – கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
கடந்த சில நாட்களாக தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான பொன்சுப்பையா நகர், டி. சவேரியார்புரம், மாப்பிள்ளையூரணி மற்றும் டேவிஸ்புரம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் வீடு புகுந்து தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. வேல்ராஜ், திரு. மகாராஜா, திருமதி. சரண்யா, தலைமை காவலர் திரு. பென்சிங், காவலர்கள் திரு. செந்தில், திரு. முத்துபாண்டி, திரு. ஆறுமுகம், திரு. சிலம்பரசன், திரு. சுந்தர்சிங் மற்றும் திரு. பாலகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
மேற்படி தனிப்படையினர் சம்பவ இடங்கள் மற்றும் அருகில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தற்போது தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்தர் நகர் பகுதியில் வசித்து வரும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் மகன் அப்பு (எ) அப்பன்ராஜ் (29) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்சுப்பையாநகர் பகுதியைச் சேர்ந்த சிவசுடலைமணி என்பவரது வீட்டில் கடந்த 31.01.2021 அன்று விலையுயர்ந்த பொருட்களை திருடுவதற்காக கதவை உடைத்து கொள்ளை முயற்சியிலும், 13.02.2021 அன்று டி. சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவரது வீட்டில் ரூபாய் 2,50,000/- மதிப்புள்ள சுமார் 4 ½ சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் திருடியதும், 21.02.2021 அன்று மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டில் ரூபாய் 1,50,500/- மதிப்புள்ள சுமார் 8 ½ சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் திருடியதும், 11.03.2021 அன்று டேவிஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மணிமுருகன் என்பவரது வீட்டில் ரூபாய் 1,00,000/- மதிப்புள்ள சுமார் 6 ½ சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் திருடியதும், கடந்த 23.03.2021 அன்று டேவிஸ்புரம் பகுதியில் வந்துகொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
மேலும் எதிரி அப்பு (எ) அப்பன்ராஜ் மீது சென்னை மாங்காடு, நசார்பேட், திருமுல்லைவாயில், ஆர்.கே. நகர், பனாவரம், அரக்கோணம், அரக்கோணம் டவுண், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி மாவட்;டம் தாளமுத்துநகர் காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 47 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மேற்படி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரியை கைது செய்து அவரிடமிருந்து சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 19 சவரன் தங்க நகைகளை கைப்பற்றினர்.
பல பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட மேற்படி எதிரியான பிரபல கொள்ளையனை தீவிர விசாரணை மேற்கொண்டு விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

