தூத்துக்குடி, ஏப்ரல், 4
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத், இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.
மனுத் தாக்கலுக்கு முன்னதாக, தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து வேட்பாளர் ஸ்ரீநாத் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டார். நகரின் பிரதான சாலைகள் வழியாக வந்த இந்த ஊர்வலம், தேர்தல் அலுவலகத்தைச் சென்றடைந்தது. தவெக தொண்டர்களின் உற்சாக முழக்கங்களுடன் வேட்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
தூத்துக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம், ஸ்ரீநாத் தனது வேட்புமனுவை முறைப்படி வழங்கினார். வேட்பாளர் ஸ்ரீநாத்துக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வசிந்த்ரா ரோச் (40), தனது மனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின் போது தவெக மத்திய மாவட்டச் செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ், தொழிலதிபர் கிஷோர்,
வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஏசுதாசன், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும் மத்திய மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

