தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயின்று வரும் ஆர்வமுள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் காவல் துறையினருக்கு உதவியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஏற்கனவே தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அழைப்பு விடுத்திருந்தார். அதே போன்று தற்போது நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் சேவையும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படுவதால், சம்மந்தப்பட்ட கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து, எத்தனை மாணவர்கள் கலந்து கொள்ள விருப்பத்துடன் உள்ளார்கள், இப்பணியில் கலந்து கொள்வதற்கு என்னென்ன வசதிகள் செய்து தரவேண்டும் என்பன பற்றி பல்வேறு கருத்துக்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் எஸ்பி பேசுகையில், தேர்தல் பணியில் கலந்து கொள்ளும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் தபால் ஓட்டு வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு காவல் ஆய்வாளர் ஏழுமலை என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்தலில் ஈடுபடும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்குமாறு அனைத்து தொகுதி தேர்தல் பாதுகாப்பு காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இதுபோன்று தேர்தல் பணியில் ஈடுபடுவது நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும், இன்றைய இளைஞர்கள்தான் வரும் காலங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்ற போகிறார்கள். ஆகவே இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 2 கல்லூரிகளும், ஊரக உட்கோட்டத்தில் 2 கல்லூரிகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 2 கல்லூரிகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 3 கல்லூரிகளும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 6 கல்லூரிகளும், மணியாச்சி உட்கோட்டத்தில் 1 கல்லூரியும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 3 கல்லூரிகளும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 2 கல்லூரிகளையும் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் மொத்தம் 21 பேர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேல், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ஏழுமலை, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு தேவி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

