தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 889 வாக்குசாவடி மையங்களுக்கும் வீல்சேர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது வாக்குசாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்த சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான சக்கர நாற்காலிகளை தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2,097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குசாவடிகள் 889 மையங்களில் அமைந்துள்ளது. இந்த வாக்குசாவடிகள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஓவ்வொரு மையங்களிலும் வீல்சேர் வசதி செய்யப்படுவதுடன் அவர்களை அழைத்து செல்ல ஒரு தன்னார்வலரும் நியமிக்கப்படவுள்ளார்கள்.
அனைத்து வாக்குசாவடிகளிலும் சாய்வு தள வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கென PWD ஆப் மூலம் தாங்கள் வாக்களிக்க வரும் நேரத்தையும் பதிவு செய்யலாம். நமது மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறும் 889 வாக்குசாவடி மையங்களுக்கும் வீல்சேர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தூத்துக்குடி வாட்டாட்சியர் ஜஸ்டின், மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

