தூத்துக்குடி பிப், 18
தூத்துக்குடி மாநகராட்சியில் 278 புதிய சாலைகள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டு, வரும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சியில் ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ திட்டத்தின் மூலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்ட 4,500 மனுக்களுக்கும் முழுமையாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. மாநகராட்சியில் சாலை வசதிகள் பெருமளவு நிறைவு பெற்றுள்ளன. சிறிய தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. தற்போது அடுத்தகட்டமாக 278 புதிய சாலைகள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இவை அனைத்தும் வரும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 20 அடி முதல் 60 அடி வரை உள்ள சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. தற்போது 5.5 அடியாக உள்ள சாலை அகலம், 7 அடியாக உயர்த்தப்பட உள்ளது. இதற்காகச் சாலைகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

பிரதான சாலையில் போக்குவரத்தைக் குறைக்க, நாம் தமிழர் வளாகத்தில் இருந்து மூன்றாவது மைல் வரை புதிய சாலை அமைக்க ஆய்வுப் பணிகள் முடிந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைவில் தொடங்கும்.
சில பகுதிகளில் உள்ள பழைய கருப்பு நிறக் குடிநீர் குழாய்களை மாற்றும் பணி நடைபெறுவதால், பணிகள் முடியும் வரை பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். பக்கிள் ஓடையின் இருபுறமும் 7 அடியாக விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.
இந்த முகாமில் மொத்தம் 24 மனுக்கள் பெறப்பட்டன. ஒருவருக்கு மனு கொடுத்த 5 நிமிடத்திலேயே சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டலத் தலைவர் கலைச்செல்வி, செயற்பொறியாளர்கள் வேலாயுதம், முனீர் அகமது, உதவிப் பொறியாளர் ராஜேஷ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன், மற்றும் கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ரெஸ்கிலின், தனலட்சுமி, மரிய கீதா, ராமு அம்மாள், பேபி ஏஞ்சலின், மும்தாஜ், மகேஸ்வரி, ஆணையரின் உதவியாளர் துரை மணி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜேஸ்பர் மார்ட்டின், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

