தூத்துக்குடி.
மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்து காத்திருந்த மகளிர் பலருக்கு உரிமைத்தொகை ரூ.1000 வங்கி கணக்குக்கு வந்து சேரவில்லை. தொகை வருமா, வராதா, நிரகரிக்கப்பட்டதா, நிராகரிப்புக்கு என்ன காரணம் என தெரியாமல் மகளிர்கள் பலர் புலம்பி வருகின்றனர். தூத்துக்குடி மாநகர பகுதியில் மகளிர் உரிமைத் தொகை பலருக்கு வரவில்லை, பதிலும் தெரியவில்லை, என்று பல ஆயிரம் பெண்கள் தவிக்கின்றனர் என முன்னாள் மாமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக்கழக நிர்வாகியுமான ஆனந்தகுமார் கடும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக இரண்டு கட்டங்களாக முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியிருந்தும் தூத்துக்குடி மாநகரில் உள்ள பல பேருக்கு நேற்று வரை உரிமைத் தொகை வரவில்லை.
உங்களுடைய விண்ணப்பம் பெறப்பட்டது என ஆகஸ்ட் முதல் வாரம் எங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதன் பிறகு இன்று வரை எங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா, பரிசீலனையில் உள்ளதா என்று தெரியவில்லை.
பல இடங்களில் வசதியானவர்களுக்கும், பல ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்களுக்கும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுபவர்கள், அதிகார பலமிக்கவர்களுக்கு பணம் வந்து விட்டது.

ஆனால் தினசரி கூலி வேலைக்கு செல்வோருக்கு பணம் இதுவரை வரவில்லை. வங்கியிலும் விசாரித்துவிட்டோம். தாலுகா அலுவலகத்திலும் பதில் தெரியவில்லை. கலெக்டர் தெரிவித்த உதவி மையம் செயல்படுவதில்லை. அரசு விரைவில் தகுதியுள்ளோர்க்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாராபட்சமின்றி மகளிர் உரிமைத் தொகை மகளிர்கள் அனைவருக்கும் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த திராவிட ஆட்சி காலம் முடிய இன்னும் 3 அமாவாசை காலகட்டம் மட்டுமே உள்ளது. தூத்துக்குடி மாநகரில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாமல் அலைக்கழிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற அனைத்து தரப்பினரிடமும் குரல் ஒலித்து வரும் இந்நேரத்தில் வருகிற 2026 பொதுத்தேர்தலில் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு பாரபட்சமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் உதவித்தொகை முறைப்படி கிடைக்கப்பெறும் என்றார்.
