தூத்துக்குடி,
மகாத்மா காந்தி பெயரில் செயல்பட்டு வந்த கிராமப்புற 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு சீர்க்குலைத்துள்ளது. இதற்கு ஆதரவான நிலையை அதிமுக எடுத்துள்ளது. இது கிராமப்புற மக்களுக்கு செய்த அநீதி ஆகும். கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2004ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை உறுதி திட்டத்திலிருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கி உள்ளனர்.

ஒன்றிய அரசு வழங்க வேண்டிய சம்பளத் தொகையில் 40 சதவீதம் மாநில அரசு வழங்க வேண்டும் என்று சட்டத்தை திருத்தியுள்ளனர். மொத்தத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துள்ளனர். ஒன்றிய அரசின் மக்கள் விரோத பாஜக அரசின் போக்கைக் கண்டித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தெற்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரைப்படி ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

