தூத்துக்குடி,
தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமாக எம்.ஜி.ஆர் மாளிகையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி கடந்த 15ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மட்டுமின்றி எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும் என்று பலர் விருப்ப மனுக்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 23ம் தேதிக்குள் தெற்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் சென்னை எம்ஜிஆர் மாளிகையில் விருப்பமனு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதனடிப்படையில் அதிமுக அலுவலகத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் விருப்ப மனு வழங்கினார்.

