தூத்துக்குடி
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக விளங்கும் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் என அமைப்புகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு, இந்திய திருநாட்டில் பேச்சுரிமையும், கருத்துரிமையும், எழுத்துரிமையும் வழங்கப்பட்டு தேர்தல் கால கட்டங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் திட்டங்களும் செயல்பாடுகளும் அரசாங்கத்தின் சாதனை திட்டங்களையும் சாமான்ய மக்களின் கோரிக்கைகளையும் அரசுக்கு எடுத்துச் சொல்லி மக்கள் பிரதிநிதிகளின் மூலம் மக்கள் பணியாற்ற வைப்பது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூணாக கருதப்படும் பத்திரிகையாளர்கள் உலக அளவில் தன்னுடைய உழைப்பை கடும் வெயில், கனமழை, பெருவெள்ளம், குளிர் என்று பாராமல் 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டே இருக்கும் கடிகாரத்தைப் போன்று ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறுகின்ற தகவல்களை சேகரித்து நாட்டை வழிநடத்தும் பிரதமர், முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வது மட்டுமின்றி எண்ணற்ற அரசியல் கட்சித்தலைவர்களின் எண்ணங்களையும் நிறைவேற்றும் இடத்தில் இருப்பவர்களின் நிலை என்னவென்று திரும்பி பார்த்தவர்களும் உண்டு, கண்டு கொள்ளாமல் சென்றவர்களும் உண்டு, கடமை உணர்வாளர்களை கடமை உணர்வோடு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார் என்று தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் 25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறவில்லை என்றாலும் 4½ ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பயணித்து வருகிறோம்.
கடந்த கால வரலாற்றை மறக்கவும் முடியவில்லை, நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளோம். மேலே குறிப்பிட்டதை போல் 25 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை மனுக்களை தூக்குச்சென்ற சங்க நிர்வாகிகள் சந்திக்காத கட்சித் தலைவர்களும் இல்லை. கலெக்டரிடமும் மனுக்கள் கொடுத்து உத்திரவை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் வாகைகுளம் விமானநிலையம் வருகை தந்த செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் நேரில் கோரிக்கை மனு அளித்து பல ஆண்டுகள் கடந்த பின்பும் நிறைவேறாமல் இருக்கும் நிலை தொடர்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு செவி சாய்க்கும் வகையில் 2019ல் மாவட்ட நிர்வாகத்தால் ஒரு ஊராட்சி பகுதியில் குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்கான வழித்தடம் இல்லாத நிலையில் வேறொரு தனிநபரை அடையாளம் காட்டினார்கள். அந்த நபரை தொடர்பு கொண்டு அப்போது தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவராக இருந்த சண்முகசுந்தரம், செயலாளராக இருந்த பிரபாகர், பொருளாளராக இருந்த சீனிவாசகன், துணை தலைவராக இருந்த ராஜேஷ், இணைச்செயலாளராக இருந்த ஜாய்சன் ஆகியோர் தனிநபரிடம் தொடர்பு கொண்டு கலந்து பேசி அந்த தனிநபர் இடத்தை அரசாங்கத்திற்கு ஒப்படைத்தால் அதிலிருந்து 10 தினங்களில் உங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படும் என்று அப்போது கலெக்டராக இருந்த சந்தீப் நந்தூரி கூறியதையடுத்து 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி புதுக்கோட்டை பத்திர பதிவு அலுவலகத்தில் ஆளுநர் பெயருக்கு பதிவு செய்யப்பட்டு 13ம் தேதி ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பிரபாகர் ஆகியோர் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் நேரில் வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த பின்பும் நடைபெறவில்லை.
இதற்கிடையில் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி 2019ல் தூத்துக்குடிக்கு வருகை தந்த போது இதே நிர்வாகத்தின் சார்பில் நேரில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதுவும் கடந்து சென்று விட்டது.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றித் தருகிறோம் என்று அதிகாரத்திற்கு வந்தவர்கள் அதிகாரிகளின் துணையோடு செய்து கொடுப்போம் என்று கூறினார்கள். காலமும் கடந்து கொண்டிருக்கிறது. சொன்ன வாக்குறுதியும் நிறைவேறாமல் இருக்கிறது. பலமுறை தூத்துக்குடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தும் பத்திரிகையாளர்களின் கோரிக்கை நிறைவேறாமல் இருந்து வருவதை வற்புறுத்தி வந்த நிலையில் மீண்டும் 20.12.2025 அன்று சனிக்கிழமை தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்து நெல்லை மாவட்ட நிகழ்ச்சிக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் முத்துகுழிக்கும் மாவட்டமான தூத்துக்குடி மாவட்ட ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மூலம் உடனடியாக வீட்டு மனை வழங்குவதற்கு உத்தரவிட்டு அதை நிறைவேற்றி பத்திரிகை துறையில் உள்ளவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் சார்பில் கோரிக்கையை முன்வைக்கின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார் என்று காத்திருக்கின்றனர்.

