தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று சிறப்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர் சிதம்பரம், உறுப்பினர்கள் இசக்கி ராஜா, மாணிக்கம், மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாரதியாருக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர் த.சண்முகசுந்தரம் பாரதிய தியாகத்தை நினைவு கூர்ந்து பேசுகையில், “பாரதியார் பிறந்த நாள் பத்திரிகையாளர்களின் எழுச்சி நாள். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த பாரதியார் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து மகிழும் திருநாள் இது. சாதிக்கொடுமைகளை எதிர்த்து, பெண்ணுரிமையை உயர்த்தி, அன்பும் கருணையும் நிறைந்த சமூகத்தை நோக்கி வழி காட்டியவர் பாரதியார்.
அவர் எழுதியது கவிதை வரிகள் மட்டுமல்ல; தேசத்தை மாற்றிய சிந்தனையின் விதைகள். ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சமூக நீதி விதைத்து, ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது’ என உண்மை போராட்டத்தை உணர்த்தியவர். சுதந்திர தாகத்தைத் தூண்டியவர்.
நாம் அவர் வாழ்ந்த காலத்தில் இல்லாமலிருந்தாலும், அவர் எழுதிய வரிகள் வாழும் இந்தக் காலத்தில் வாழ்வதே நமக்குப் பெருமை,” என்றார்.
மேலும், “பத்திரிகையாளர்களின் உரிமையை காக்கவும், உண்மை செய்தியை மக்களிடம் கொண்டு செல்லவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” எனக் கூறி செய்தியாளர்கள் அனைவரிடமும் சபதம் எடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

