குலசேகரன்பட்டினத்தில் சாலையில் கிடந்த 6½ பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள் 2 பேரை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஒரு தனியார் ஏஜென்சியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ரஞ்சித்குமார் (32), குமார் (35). இந்த 2பேரும், தினமும் உடன்குடி, திசையன்விளை, பரமன்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு பலசரக்கு பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்து வருவது வழக்கம்.
வழக்கம் போல, சம்பவத்தன்று உடன்குடி கீழபஜார் பகுதியில் 2பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் ஒரு மணிபர்ஸ் கிடந்துள்ளது. அதை எடுத்து ரஞ்சித்குமார் பிரித்து பார்த்த போது அதில், சிறிய தங்க கட்டியும், தங்க சங்கிலி ஒன்றும் இருந்துள்ளது. உடனடியாக அதனை குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு சென்று, காவல் ஆய்வாளர் பிரபு பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர். அப்போது உடன்குடி வணிகர்கள் முன்னேற்ற சங்க தலைவர் அம்புரோஸ், செயலாளர் சதீஷ், துணைத் தலைவர் பிரதீப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, அந்த நகையை எடை போட்டு பார்த்தபோது, 6 ½ பவுன் இருந்தது. இதை யாரோ சாலையோரத்தில் தவறிவிட்டு சென்றது தெரிய வந்தது. இந்த நகையை எடுத்து வந்து நேர்மையாக ஒப்படைத்த அந்த 2 பேரையும் காவல் ஆய்வாளர் பாராட்டினார். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம், நகைகளை தவறி விட்டு சென்றது யார்? என குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

