தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஓட்டப்பிடாரம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர் தலைமையில், ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகவள்ளி முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊராட்சிக்குள் நடைபெற்று வரும் அரசு நலத் திட்டங்கள், குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட பொதுமக்கள் நலப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, ஓட்டப்பிடாரம் ஊராட்சி உட்பட்ட முப்புலிவெட்டி கிராமத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அரசு புறம்போக்கு ஓடைகள் மற்றும் குளங்களில் அமசோ சோலார் பார்ம் குஜராத் மற்றும் எம்எஸ் டொரென்டோ அக்ரா பிரைவேட் லிமிடெட் பெங்களுர் கர்நாடகா ஆகிய சோலார் நிறுவனங்களுக்கு சோலார் போல்கள் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட முப்புலிவெட்டி கிராம ஊர் பொது மக்கள் சார்பாக ஓட்டப்பிடாரத்தில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

முப்புலிவெட்டி கிராமத்தில் ஓட்டப்பிடாரம் கிராம மாலில் சர்வே எண்கள் : 699, 700, 713, 711ஃ1யு, 704ஃ3, 705ஃ3, 701ஃ1 ஆகியவற்றில் சுமார் 90 ஏக்கரில் மேற்படி சோலார் நிறுவனம் அமைத்துள்ளனர்.
அந்த சோலார் நிறுவனத்தில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோத சமூக விரோத செயலுக்கு ஆதரவாக எங்கள் ஊர் மக்களின் வாழ்வாதாரத்தை கொடுக்கும் வகையில் எங்கள் பகுதி முப்புலிவெட்டி ஊரிலுள்ள விவசாய இடங்களிலும் சர்வே எண் : 295, 347, 575, 836, 852, 864 – ஆகிய அரசு புறம்போக்கு இடங்கள், குளங்கள், ஓடைகள், பொது பாதைகள் மற்றும் ஊர் பொது இடங்களிலும் ஆகியவற்றில் எங்கள் ஊர் பொதுமக்கள் உயிருக்கும், உடமைக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக சோலார் நிறுவனங்களுக்காக போஸ்ட் அமைக்கும் பணிகளை தற்போது ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ-வின் உடன்பிறந்த சகோதரர் ஆயிரவன்பட்டி முருகேசன் எங்கள் பகுதியில் இரவு பகலாக ஊர் பொதுமக்களை மிரட்டி கொண்டு சட்ட விரோதமாக செய்து வருகின்றார்.
மேலும் மேற்படி நிறுவனத்தின் பணிகளுக்கு நாங்கள் இடையூராக இருப்பதாக கூறி அயிரவன் பட்டி முருகேசன் எங்கள் பகுதி விவசாய இடங்கள் மற்றும் புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து எவ்வித அனுமதியில்லாமல் பொதுமக்களை மிரட்டி தொடர்ந்து ஊர் பொதுபாதைகளை மற்றும் குளங்களையும், அரசு இடங்களையும் ஆக்கிரமித்து சோலார் போஸ்ட் அமைக்கும் பணிகளை சட்ட விரோதமாக செய்து வருகின்றனர். மேற்படி சட்ட விரோதமாக நடைபெறும் பணிகளை ஊரக உள்ளாட்சித்துறை, வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் மூலம் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கள ஆய்வு மற்றும் குளங்களை அளவீடு செய்து சட்டவிரோதமாக நடைபெறும் சோலார் பணிகளையும், நிறுத்திடக்கோரியும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் சோலார் போஸ்ட்களை அகற்றிடகோரியும் எங்கள் ஊர் விவசாய இடங்களையும், கண்மாய்களையும், அரசு புறம்போக்கு இடங்களையும், காத்திட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், ஊர் பொதுமக்களுக்கு பல்வேறு இடைஞ்சல்களையும், பல்வேறு இன்னல்களையும் தொடர்ந்து செய்து வரும் இச்சோலார் நிறுவனத்தினர்; மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கொடுத்து பல்வேறு அட்டுழியங்கள் மற்றும் அராஜகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அயிரவன்பட்டி முருகேசன் மற்றும் அவரது அடியாட்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், மேற்கொண்ட சோலார் நிறுவனங்களுக்கு சோலார் மற்றும் போஸ்ட் அமைக்க எவ்வித அனுமதி சான்றும் மற்றும் தடையில்லா சான்றும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பாக எவ்வித சான்றும் வழங்க வேண்டாம் என எங்களது ஆட்சபனை தெரிவித்து இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம். தவறும் பட்சத்தில் இச்சோலார் நிறுவனத்தினர் போஸ்ட் அமைக்கும் பிரச்சனை சம்மந்தமாக இப்பகுதி விவசாய பெருமக்கள், சுற்றுவட்டார ஊர் பொதுமக்கள் மற்றும் முப்புலிவெட்டி கிராம பொதுமக்கள் சார்பாக ஒன்றிணைந்து சண்முகையா எம்எல்ஏ அலுவலத்தின் முன்பு சுமார் 2000 பேர் கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் விரைவில் நடைபெறும் என்ற விபரத்தை இக்கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இக்கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி செயலாளர் ராமலிங்கம் மீது பல்வேறு நிதிமுறைகேடு புகார்கள் தொடரப்பட்டது. புகார் மனுவாக கொடுக்கப்பட்டது. மேற்படி இப்பிரச்சனை சம்பந்தமாக ராமலிங்கம் மீது நடவடிக்கை எடுத்து, ஊராட்சி நிதியை தணிக்கை செய்ய வேண்டும் எனவும் கிராம சபை கூட்டத்தில் கிராம பொதுமக்களால் கேட்டுக்கொள்ளப்பட்டு மனுவாக அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கூட்டத்தின் நடுவே சில பொதுமக்கள் எழுந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்பவர்களிடம் இருந்து இந்த கிராம சபைக் கூட்டத்திற்காக பணம் வசூல் செய்யப்பட்டதாகவும், அந்த வசூலித்த தொகையை ஒட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலர்கள் தங்களுக்குள் பங்கு வைத்துக் கொண்டதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
மக்களின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. பலர், அரசு நிதியில் நடக்கும் கூட்டத்திற்காக ஏழை தொழிலாளர்களிடமிருந்து பணம் வாங்குவது ஏற்க முடியாதது, என்று குரல் கொடுத்தனர். இதனால் சில நிமிடங்கள் கூட்டம் இடைநிறுத்தப்பட்டு, அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் அதிகாரிகள் தலையிட்டு பொதுமக்களை சமாதானப்படுத்தினர். குற்றச்சாட்டு குறித்து மேலதிக விசாரணை நடத்தப்படும் என்றும், இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
இந்த சம்பவம் ஒட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள், 100 நாள் வேலைத் திட்டம் போன்ற ஏழைகளுக்கான திட்டங்களில் கூட பணம் வசூல் செய்யப்படுவது வருத்தத்திற்குரியது, என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ உடன்பிறந்த சகோதரர் முருகேசன் மற்றும் ஊராட்சி செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பெண்கள், விவசாயிகள், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தனர். இதனால் ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பும், பரபரப்பும் தொற்றிக்கொண்டது.

