தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு மூலம் 1 கோடியே 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ், தேர்தல் பொது பார்வையாளர்கள் ஜுஜவரப்பு பாலாஜி, (தூத்துக்குடி), அஸ்வானி குமார் சௌதாரி, (விளாத்திகுளம், கோவில்பட்டி), அனில் குமார், (ஓட்டப்பிடாரம்) மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி நமது மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குபதிவிற்கு பயன்படுத்தப்படும் எந்திரங்கள் தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்படும் இடங்கள், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள் உள்ளிட்டவைகளை தேர்தல் பொது பார்வையாளர்களுடன் நேரில் வந்து ஆய்வு செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து பகுதியிலும் கொரனா விதிமுறைகளின்படி எவ்வாறு கடைபிடிப்பது என்பது குறித்தும் பார்வையிடப்பட்டது.
வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்ககூடிய பகுதிகளையும் பார்வையிடப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தேர்தல் பொது பார்வையாளர்களும் பார்வையிட்டனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மின்னனு வாக்குபதிவு எந்திரங்களை வைக்ககூடிய ஸ்ட்ராங் ரூமில் என்nஎன்ன பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதும் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் நமது மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற தேவையான வசதிகள், முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
வாக்குசாவடியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு ஏற்கனவே 17.3.2021 முதல்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. இன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குசாவடி அலுவலர்களுக்கு ரேண்டம் முறையில் எந்த சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ளார்கள் குறித்து ரேண்டம் செய்யப்பட்டது. வரும் 26.3.2021 அன்று இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற உள்ளது. நமது மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 120 பேர் உள்ளனர். அதிகபட்சமாக கோவில்பட்டி, தூத்துக்குடியில் 26 நபர்களும், குறைந்தபட்சமாக திருச்செந்தூர், விளாத்திகுளத்தில் 15 வேட்பாளர்களும் போட்டியிட உள்ளர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் 2 தொகுதியில் ஒரு பேலட் யுனிட்டும், மற்ற 4 தொகுதியில் 2 பேலட் யுனிட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. தேவையான மின்னனு வாக்குபதிவு எந்திரங்கள் நம்மிடம் உள்ளது. பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு மூலம் இதுவரை 1 கோடியே 20 லட்சம் அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எப்ஐஆர் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஆய்வின்போது சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெள்ளைச்சாமிராஜ், உதவி செயற்பொறியாளர் (மின் பணிகள்) ராமலிங்கம், உதவி பொறியாளர்கள் பாலா, தினேஷ் மற்றும் பல்வேறு அலுவலர்கள் உடன் சென்றனர்.

