தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சியும் வீகென் டிரஸ்ட் மற்றும் செயிண்ட் மேரீஸ் கல்லூரியும் இணைந்து மேலும் வேல்ட் கவுன்சில் பார் உமன் ரைட்ஸ் உள்பட பல்வேறு சமூக நிறுவனத்தின் சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட இனிகோ நகர் கடற்கரை பகுதியில் உள்ள கழிவு பொருட்களான மீன் வலை, செருப்பு, பிளாஸ்டிக் கப், கயிறு உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை கல்லூரி மாணவிகள், தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் அதிகாலையில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் தேவையற்ற கருவேல செடிகளை ஜேசிபி இந்திரத்தின் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. கடற்கரை சாலை பகுதியில் உள்ள பாதசாரிகள் நடைபாதை செல்லும் பொதுமக்கள் தேவையற்ற கழிவுகளை கடலின் உள்புறம் வீசி சென்று வருகின்றனர். அது கடல் அலையின் ஒதுக்கு புறத்தில் ஒதுங்கி கிடந்த அந்த தேவையற்ற கழிவுகளையும் 2 கி.மீ தூரம் நடந்தே சென்று மாணவிகள், சுகாதார பணியாளர்கள் இணைந்து அப்புறப்படுத்தியதை பார்வையிட்டு, அதில் மதுபிரியர்கள் அருந்திவிட்டு வீசிச் சென்ற மது பாட்டில்களையும் அலையின் சறுக்கு ஒரத்தில் ஒதுங்கி கிடந்த பாட்டில்களையும் மாணவிகள் தங்கள் கைகளால் அப்புறப்படுத்தியவர்களிடம் உங்களுடைய பாதுகாப்பு நலனும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு மனித நேயத்தோடு பணியாற்றுகிற உங்களது தேவையை இந்த மாநகராட்சி நிர்வாகம் பாராட்டுகிறது என்ற அறிவுரையை கூறி, பின்னர் கடற்கரை சாலையில் 5 கி.மீ தூரத்திற்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் நடைபாதையை பார்வையிட்டு, இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்து, பனைமர விதைகளை கடற்கரையோரங்களில் விதைத்தார்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தினசரி 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் 2000 பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகளை 60 வார்டுகளிலும் மேற்கொண்டு வருகிறோம். அதன் மூலம் 120 டன் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகிய இரண்டு வகையான கழிவுகளை சேகரித்து அதை பிரித்தெடுத்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சுகாதாரத்தை பேணி பாதுகாத்து வருகிறோம். அதேநேரத்தில் மாசு இல்லாத மாநகரும் உருவாக வேண்டும் அதற்கு நாம் ஒவ்வொருவரும் தனது வீட்டில் ஒரு மரம் வளர்க்க வேண்டும். இயற்கை நமக்கு கொடுத்த மிகப்பெரிய வரபிரசாதமான கடற்கரையை பகுதிதான பல ஏற்றுமதி இறக்குமதிக்கு காரணமாக உள்ளது. அப்பகுதியில் தேவையற்ற கழிவு பொருட்கள் அவ்வப்போது மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுகள் கடல் அலையின் மூலம் கடலுக்குள் சென்றால் கடலின் தன்மையும் பாதிக்கப்படும், மீன்களின் இனப்பெருக்கத்திற்கும் தடையாக இருக்க கூடும். கடல் நமது தாய் என்பதை கருத்தில் கொண்டு இப்பகுதியை பயன்படுத்தும் பொதுமக்கள் சிலவற்றை முழுமையாக தவிர்த்து கடல் வளமும் மாநகராட்சி நகரமும் மாசு இல்லாத வகையில் உருவாகுவதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். மக்கள் பணி செய்வது தான் எங்களது கடமை என்கிற உணர்வோடு பணியாற்றி வருகிறோம் என்றார்.

தூய்மைப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் தேவையான முககவசம், கையுறை, மற்றும் காலை உணவுகளை மாநகராட்சி சார்பில் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் ரெக்ஸ்லின், சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், வீகென் டிரஸ்ட் தலைவர் ஏஞ்சலின், செயலாளர் முத்துராஜ் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

