தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் என்.சுந்தரை ஆதரித்து கட்சியின் முதன்மை துணை பொதுச் செயலாளரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அவர் தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
தூத்துக்குடி தேரடி திடலில் வேட்பாளரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மக்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். மாறி, மாறி திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டு உள்ளீர்கள். தி.மு.க. குடும்ப கட்சி. அ.தி.மு.க.வின் பெரிய ஆளுமை கொண்ட தலைவி தற்போது இல்லை. இதனால் அவர்களும் திணறிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் அனைத்தும் இலவசமாக தருவதாக கூறுகிறார்கள். எங்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்களுக்கு மீன்பிடிக்க கற்றுகொடுக்க வேண்டும். அதற்காக தூண்டில் வாங்கி கொடுக்கலாம் என்று கூறுவார். மீனை பிடித்து கொடுத்தால் நீங்கள் எப்படி முன்னேறுவீர்கள்.
அதே போன்று கூட்டணியில் உள்ள கமல்ஹாசன் நல்ல நடிகர். முற்போக்கு சிந்தனை உள்ளவர். அவர் தனது கடமையாக கருதி அரசியலுக்கு வந்து உள்ளார். அவர் நிச்சயம் நல்லது செய்வார். தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டும். அது தூத்துக்குடியில் இருந்து தொடங்கட்டும். ஆகையால் நீங்கள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளருக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

